Monday, October 3, 2016

SEED அறக்கட்டளை ஒரு முன்னுரை...

         


         1987-1992 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்ற நாங்கள், ஒரு வருடம் முன் சந்தித்த பொழுது எங்கள் வகுப்புத் தோழர் முரளியின் இழப்பை கனத்த இதயத்துடன் நினைவு கூர்ந்தோம். நாங்கள் படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டு இருந்தவர் புற்றுநோய் அரக்கனிடம் போராடி தோற்றுப் போனார். சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிளையும் வகுப்பு தோழர் தோழியர் அனைவரும் சேர்ந்து செய்தும் காப்பாற்ற முடியவில்லை.
இது மாதிரியான எதிர்பாராத இன்னல்கள் நம் தோழர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் வரும் பொழுது உதவும் பொருட்டு ஒரு அறக்கட்டளை ( TRUST) ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணம் மனதில் தோன்றியது
முரளியின் நினைவலைகள் ஏற்படுத்திய கண்ணீரால் ஈரமாயிருந்த எங்கள் இதயநிலத்தில் அந்த எண்ணவிதை ஆழப் பதிந்தது.  அது விதை (SEED 87 TRUST) என்ற பெயரில் முளைத்திருக்கிறது.
கால் நூற்றாண்டுகளுக்கு முன் திரைப்படங்களில் மட்டுமே கேள்விபட்டிருந்த புற்று நோய் இப்போது, தெருவில் ஒருவருக்கு என்ற நிலையில் இருக்கிறது. குடும்பத்தில் ஒருத்தருக்கு என்கின்ற அவல நிலை வரும் முன் அதை தடுக்க வேண்டும் என்பது எங்களது முதல் நோக்கம் .
ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவி , பொதுமக்களுக்கு நோயணுகாமல் வாழ வழிகாட்டுதல் என எங்கள் நோக்கம் விரிவடைந்தது.

         வலையுலக தோழமைகளே !

        இந்த வலைப்பூவின் நோக்கம் எங்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகளை மட்டும் சொல்வதல்ல.
வலது காதுக்கு ஒரு சிறப்பு மருத்துவர், இடது கைக்கு ஒரு சிறப்பு நிபுணர் என்று தேடி அலையும் மக்களுக்கு உங்கள் முதன்மை மருத்துவர் உங்கள் சமையல் அறையிலும் , அஞ்சறைப் பெட்டியினுள்ளும் இருக்கிறார் என்று சித்தர்களும் , நம் முன்னோர்களும்  சொல்லிச் சென்றதை உங்களுக்கு அறியத்தருவதும் எங்கள் கடமை

ஆரோக்ய வாழ்விற்கு வித்திடுகிறோம், கரம்கொடுங்கள் கைகோர்த்து நோயறுப்போம்....